ஒற்றுமை மற்றும் இணக்க வாழ்வின் ரமழான் கொண்டாட்டம்
“ரமழான் என்பது வெறும் நோன்புக் காலம் மட்டுமல்ல; அது பொறுமை, தியாகம் மற்றும் பரஸ்பர மரியாதையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு புனித விழாவாகும்.”
மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில், வரகாபொல பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி அண்மையில் மிகவும் சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் நடைபெற்றது.
வரகாபொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ அவர்களின் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளர் மற்றும் செயலகத்தின் மூத்த அலுவலர்களின் பங்கேற்புடனும் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வரகாபொல பிரிவு பிரதிநிதி திரு. எம். அக்ரம் மற்றும் பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் அதிபர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
வரகாபொல பிரிவிலுள்ள மதரஸா மற்றும் ஞாயிறு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த விழா, மாணவர்களின் நடனங்கள், பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக அமைந்தது.
இந்நிகழ்வின் மூலம் ரமழானின் உயரிய செய்தியும் அதன் மனிதநேயப் பண்புகளும் பங்கேற்பாளர்களிடையே பகிரப்பட்டதுடன், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் இணக்க வாழ்வு மேலும் வலுப்பெற்றது.
இத்தகைய நிகழ்ச்சிகள் ஊடாக எமது சமூகத்தில் இன மற்றும் மத நல்லிணக்கம் மேலும் உறுதிப்பெற்று, பரஸ்பர மரியாதை, நட்பு மற்றும் அமைதி நிலைத்திருக்க வேண்டுமென நாம் பிரார்த்திக்கிறோம்


















